அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மா தவத்தோன் புத்திரன் போய்

மறிகடல்வாய் மாண்டானை

ஓதுவித்த தக்கணையா

உருவுருவே கொடுத்தான் ஊர்;

தோதவத்தித் தூய் மறையோர்

துறைபடியத் துளும்பி எங்கும்

போதில் வைத்த தேன் சொரியும்

புனல் அரங்கம் என்பதுவே.


அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பிறப்பு அகத்தே மாண்டு ஒழிந்த

பிள்ளைகளை நால்வரையும்

இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து

ஒருப்படுத்த உறைப்பன் ஊர்;

மறைப் பெருந்தீ வளர்த்திருப்பார்

வருவிருந்தை அளித்திருப்பார்

சிறப்பு உடைய மறையவர் வாழ்

திருவரங்கம் என்பதுவே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மருமகன்தன் சந்ததியை

உயிர்மீட்டு மைத்துனன்மார்

உருமகத்தே வீழாமே

குருமுகமாய்க் காத்தான் ஊர்;

திருமுகமாய்ச் செங்கமலம்

திருநிறமாய்க் கருங்குவளை

பொரு முகமாய் நின்று அலரும்

புனல் அரங்கம் என்பதுவே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கூன் தொழுத்தை சிதகு உரைப்பக்

கொடியவள் வாய்க் கடியசொற்கேட்டு

ஈன்று எடுத்த தாயரையும்

இராச்சியமும் ஆங்கு ஒழிய,

கான் தொடுத்த நெறி போகிக்

கண்டகரைக் களைந்தான் ஊர்;

தேன் தொடுத்த மலர்ச் சோலைத்

திருவரங்கம் என்பதுவே

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பெருவரங்கள் அவைபற்றிப்

பிழக்கு உடைய இராவணனை

உரு அரங்கப் பொருது அழித்து இவ்

உலகினைக் கண்பெறுத்தான் ஊர் ;

குரவு அரும்பக் கோங்கு அலரக்

குயில் கூவும் குளிர் பொழில் சூழ்

திருவரங்கம் என்பதுவே

என் திருமால் சேர்விடமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கீழ் உலகில் அசுரர்களைக்

கிழங்கிருந்து கிளராமே

ஆழி விடுத்து அவருடைய

கரு அழித்த அழிப்பன் ஊர் ;

தாழைமடல் ஊடு உரிஞ்சித்

தவள வண்ணப் பொடி அணிந்து

யாழின் இசை வண்டினங்கள்

ஆளம் வைக்கும் அரங்கமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கொழுப்பு உடைய செழுங்குருதி

கொழித்து இழிந்து குமிழ்த்து எறியப்

பிழக்கு உடைய அசுரர்களைப்

பிணம் படுத்த பெருமான் ஊர் ;

தழுப்பு அரிய சந்தனங்கள்

தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு

தெழிப்பு உடைய காவிரி வந்து

அடிதொழும் சீர் அரங்கமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வல்எயிற்றுக் கேழலுமாய்

வாள்எயிற்றுச் சீயமுமாய்

எல்லை இல்லாத் தரணியையும்

அவுணனையும் இடந்தான் ஊர் ;

எல்லியம் போது இருஞ்சிறை வண்டு

எம்பெருமான் குணம் பாடி

மல்லிகை வெண்சங்கு ஊதும்

மதிள் அரங்கம் என்பதுவே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

குன்று ஆடு கொழு முகில் போல்

குவளைகள் போல் குரைகடல் போல்

நின்று ஆடு கணமயில் போல்

நிறம் உடைய நெடுமால் ஊர் ;

குன்று ஊடு பொழில் நுழைந்து

கொடி இடையார் முலை அணவி

மன்று ஊடு தென்றல் உலாம்

மதிள் அரங்கம் என்பதுவே

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பரு வரங்கள் அவைபற்றிப்

படை ஆலித்து எழுந்தானைச்

செரு அரங்கப் பொருது அழித்த

திருவாளன் திருப்பதிமேல்

திருவரங்கத் தமிழ்மாலை

விட்டுசித்தன் விரித்தன கொண்டு

இருவர் அங்கம் எரித்தானை

ஏத்த வல்லார் அடியாமே.

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.